பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே, 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு, ஜனவரி 20 ஆம் தேதி பேரவையை கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் ஆளுநர் ரவி, தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விக்கு, தமிழக சட்டமன்றத்தின் மரபு எதுவும் எனவும், அதனை ஆளுநர் ரவி மதித்து நடப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
