வேளாண் துறையில் பாரதம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கோவை வந்தார். கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இயற்கை விவசாயம் தனது இதயத்திற்கு நெருக்கமானது என்றார். விவசாயிகள் பேசியதை உணர முடிந்ததாகவும், ஆனால், புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். தான் மேடை ஏறும் போது, விவசாயிகள் துண்டை சுழற்றியதை பார்க்கும் போது, பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என தனது மனம் எண்ணியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
கோவை மருதமலையில் குடிகொண்டிருக்கும் மருதமலை முருகனுக்கு தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தென் மாநிலங்களின் தொழில்துறையின் சக்தி பீடமாக கோவை திகழ்வதாகவும், ஜவுளித்துறையில் நாட்டிற்கு பங்களிப்பு செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித் தொகையை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறு விவசாயிகளுக்கு இதுவரை ரூ.4 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தால் பலனடைந்த விவசாயிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். ‘பி.எம். கிசான்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயனடைவதாகவும், கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடினார். இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பிரதமர் பார்வையிட்டார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர்.
விழாவின் சுவாரஸ்யமாக, இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும் என குறிப்பிட்டு சிறுமிகள் வைத்திருந்த பதாகையை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
