தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது குரங்கணி அருவி நீரோடை.இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி போடிநாயக்கனூர் சுற்று வட்டார மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரள எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குரங்கணி அருவி நீரோடையில் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளதால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் இந்த அருவி மற்றும் ஆற்றுப் பகுதிக்கு சென்று குளிக்க தடை விதித்துள்ளனர். தடையையும் மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு சென்று குளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போடிநாயக்கனூர் மேலத்தெரு பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ஜஹாங்கீர்(47) .
இவர் போடிநாயக்கனூரில் உள்ள அரசு வங்கி ஒன்றில் கேசியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் மதுரை வாகைகுளம் பகுதியில் இருந்து வந்த தனது உறவினர் மஜீத் (52) மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் ஏழு பேர் குரங்கணி அருவி நீரோடைக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

நேற்று மாலை அங்கு குளித்துவிட்டு புறப்படும் போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஆற்றில் திடீரென்று நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஐந்து பேர் நீரோடையில் இருந்து வெளியேறி தப்பிய நிலையில், அவர்கள் கண் முன்னே ஜஹாங்கீர் மற்றும் மஜீத் என்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் காவல்துறை உதவியுடன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு நபர்களையும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேடியும்,கிடைக்காத நிலையில் சூழலில் முற்றிலும் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.இன்றுகாலை தேடுதல் வேட்டை தொடங்கிய நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படாத இப்பகுதியில் வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு தெரிந்த நபர்களை அழைத்துக் கொண்டு வந்து இதுபோன்று ஆபத்தில் சிக்கிக் கொண்டு உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் வனத்துறையினர் இப்பகுதியில் உள்ளே நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும்,விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…..

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version