திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் நெற்றியில் இருந்த விபூதியை அழித்தது ஏன் என விளக்கமளித்துள்ளார்.
திருமாவளவன் கடந்த 19-ம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது, தம்பதியினர் செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது தனது நெற்றியில் இருந்த விபூதியை அழித்து விட்டு அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளானது.
கடந்த 2019-ம் ஆண்டு சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்தியிருந்தார் திருமாவளவன். இதனால் அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என இந்து அமைப்புகள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை எனவும், இந்துத்துவத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் நெற்றியில் வேர்வை இருந்ததால் அல்லது எப்பொழுதும் முடியை சரி செய்வது போல செய்தேன் இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என விளக்கமளித்துள்ளார் திருமாவளவன். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், ”தோழர்களின் அழைப்பை ஏற்று திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்தேன். 30 ஆண்டுகளுக்கு முன்பாக போனது எனக்கு நினைவிருக்கிறது மீண்டும் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எழுந்தது சென்றேன்.
திருப்பரங்குன்றத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கருவறை சாமி தரிசனம் செய்ய முடியவில்லை வெளியில் சாமியை வைத்திருந்தார்கள் அங்கு சாமி தரிசனம் செய்து எனக்கு திருநீர் பூசினார்கள் கழுத்தில் மாலை அணிவித்தார்கள்
ஏறத்தாழ 1 மணி நேரம் கோயிலில் இருந்தோம். தூய்மை பணியாளர்கள் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் வாசலில் வரும்பொழுது புதிதாக திருமணமான தம்பதி செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டார்கள் அவர்களே எடுக்க முயற்சித்த போது நானே வாங்கி அதனை எடுத்தேன்.
அப்போது நெற்றியை நான் துடைத்தேன் அது வழக்கமான ஒன்று நெற்றியில் வேர்த்திருக்கும் திருநீர் இருக்கிறது என்பதற்காக துடைக்கவில்லை, எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி நெற்றியை துடைத்தேன் அல்லது சரி செய்தேன்.. இதை வைத்துக்கொண்டு ஒரு வார காலமாக கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள் கூட்டம் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றாலும் கூட மீது நம்பிக்கை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை சொல்கிறேன்” என கூறியுள்ளார்.