மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபம் ஏற்றலாம் எனும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.
மேலும், காவல் துறைக்கு இணையாக சி.ஐ.எஸ்.எப். செயல்பட முடியாது என்றும் தமிழ்நாடு அரசு கூறியது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. தனிநீதிபதி சுவாமிநாதன் நேற்று நடந்த மோதல் காட்சிகளை பார்த்தாரா என தெரியவில்லை என்றும் அரசு தெரிவித்தது.
பின்னர் வாதிட்ட தர்கா தரப்பினர், கோயில் நிர்வாகத்தை தவிர்த்துவிட்டு மனுதாரர் தீபம் ஏற்ற செல்வதை ஏற்க முடியாது என்று கூறினர்.மேலும், அது தீபத்தூண் இல்லை, வெளிச்சம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தூண் என்றும் தர்கா தரப்பு வாதிட்டது.
இதேபோன்று, வழக்கத்தில் உள்ள நடைமுறைக்கு எதிராக நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு இருப்பதாக அறநிலையத் துறை தெரிவித்தது.மேலும், 100 ஆண்டுகளாக தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை என்பதை நீதிபதி சுவாமிநாதனே ஏற்றுக்கொண்டார் என்றும் அறநிலையத்துறை சுட்டிக்காட்டியது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மதுரை ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
உள்நோக்கத்துடன் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதாகவும்,  பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை என்றும் தெரிவித்தனர். தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவரே விசாரிப்பார் எனத் தீர்ப்பளித்தனர்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version