தக்காளி விளைச்சல் குறைவு மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ₹40 முதல் ₹50 வரை விற்பனையாகிறது.

 

வழக்கமாக திண்டுக்கல் சந்தைக்கு ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், தேனி, பழனி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், தற்போது போதிய மழையின்மை காரணமாக இந்தப் பகுதிகளில் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. தினசரி 40 டன் தக்காளி வர வேண்டிய நிலையில், தற்போது வெறும் 10 டன் மட்டுமே சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது.

 

அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் பெய்து வரும் மழையால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. வடமாநிலங்களில் தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால், தமிழகத்திலிருந்து தக்காளி ஏற்றுமதியாவது திண்டுக்கல்லில் விலையேற்றத்திற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

 

கடந்த வாரம் திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ₹20 முதல் ₹30 வரை விற்பனையானது. ஆனால், இன்று அதன் விலை ₹50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ₹250க்கு விற்பனையான 15 கிலோ தக்காளி பெட்டி, தற்போது ₹500க்கு விற்பனையாகிறது. முதல் தர தக்காளி பெட்டியின் விலை ₹900 வரை எட்டியுள்ளது.தக்காளியின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றும், இல்லையெனில் விலை மேலும் கடுமையாக உயரக்கூடும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குப் பிறகு தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version