மடப்புரம் கோயில் காவலர் அஜித் குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தக் கொலை வழக்கு தற்போது சிபிஐ வசம் உள்ளது. முன்னதாக, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட அஜித் குமார் குடும்பத்திற்கு என்னென்ன உதவிகள் செய்துள்ளது என்பது குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

 

இன்று (ஜூலை 22, 2025), நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் மரியா கிளாட் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், அஜித் குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக ₹7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள்:

 

வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், சக்திஸ்வரன், பிரவீன் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரிய மனுவை முதன்மை நீதித்துறை நடுவர் 7 நாட்களுக்குள் விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

 

தமிழக அரசு ₹7.5 லட்சம் இழப்பீடாகவும், அரசு வேலை மற்றும் இலவச வீட்டுமனை ஆகியவற்றை வழங்கியுள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே, அரசு தரப்பில் ₹25 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட அஜித்தின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

 

அரசு தரப்பில் இந்த வழக்கில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version