தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2004ம் ஆண்டில் ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி கோரத்தாண்டவத்தின் 21ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதிக்கு முன்பு வரை, சுனாமி எனும் வார்த்தையை தமிழக மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். எந்நாளும் போன்று அன்றைய நாளும் சூரியன் உதிக்க, விடியும்போதே எழுந்தது மரண ஓலம். பெண்களையும், பச்சிளங்குழந்தைகளையும் மொத்தமாக தின்று தீர்த்தது கடல்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எழுந்த ஆழிப்பேரலை, தமிழக கடலோரப்பகுதிகளை வாரி சுருட்டியது. வந்த வேகத்தில், பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை சூறையாடி, மெளனமாய் திரும்பிச் சென்றன கடல் அலைகள்.
பெற்றோர், குழந்தைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள், கணவன், மனைவி என ஒட்டுமொத்த உறவுகளையும் ஆழிப்பேரலைக்கு பலி கொடுத்து, கடல் மண்ணில் நிர்கதியாய் நின்று, கதறி அழுதோரின் ஓலம், உலகம் முழுக்க நடுங்க வைத்தது.
கன்னியாகுமரியில் கொடூர அலையில் அகப்பட்டு 21 ஆண்டுகள் ஆன போதும், அந்த நாள் ஆறாத ரணமாக இன்னும் உறுத்தி கொண்டிருக்கிறது என உறவுகளை இழந்தோர் கண்ணீர் வடிக்கின்றனர். நாகையில் எல்லை மீறி பொங்கி எழுந்த ஆழி பேரலைகள் அனைத்தும், தங்கள் நெஞ்சத்திற்குள் இன்றும் பதைபதைப்ப தருவதாக. சுனாமியில் இருந்து உயிர் தப்பியோர் சொல்கின்றனர்.
சுனாமி பாதிப்பால் மக்கள் மனதில் உண்டான வடு, இன்னும் மறையவில்லை.ஆழிப்பேரலை தந்த ரணங்களோடு, ஆண்டுதோறும் டிசம்பர் 26-ஐ மெளனத்தின் உச்சத்தில் கடந்து செல்கின்றனர் உறவுகளை இழந்த உயிர்கள்.
