சென்னையில் ரூ.800 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, காமராஜரின் புகழை உயர்த்தும் பல்வேறு நடவடிக்கைகளை திமுக ஆட்சியே மேற்கொண்டதாக தெரிவித்தார்.
காமராஜரின் வழியில் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திமுக தலைவர் செயல்படுத்தியதாக கூறிய அவர், காமராஜரின் புகழை பறைசாற்றும் பணிகளை திமுக அரசு தொடர்ந்து செய்ததாக குறிப்பிட்டார்.
சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்ட ரூ.800 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் தற்போதைய தவெக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அந்தத் திட்டங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் கோரி, விரைவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்றும் கூறினார். நிதி நெருக்கடி என்ற காரணத்தை காட்டி முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தி வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து மானியக் கோரிக்கை விவாதத்தில் திமுக விரிவாக எடுத்துரைக்கும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.
