கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதற்கிடையில், விஜய் கரூர் செல்லும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தினர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும், நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்றும் இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது என விஜய் பேசியதாகவும் கூறப்படுகிறது. வீடியோ காலில் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை விஜய் பேசி ஆறுதல் கூறியுள்ளார். வீடியோ காலில் பேசியபோது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.