சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்த புகாரில், தவெக உறுப்பினரான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் ‘இட்லி கடை’. இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த புதன்கிழமை (அக்டோபர்-1) அன்று வெளியானது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இட்லி கடை திரைப்படத்தை காண சென்றிருந்தார். அப்போது படம் முடிந்து வெளியே வருபவர்களிடம் விமர்சனம் கேட்கப்பட்டது.
அப்போது தனியார் யூடியூப் சேனலை சேர்ந்த நபர்கள் திரைப்படம் எப்படி உள்ளது என்று திரைப்படத்தை காண சென்ற ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திரைப்படத்தை காணச் சென்ற விஜய் ரசிகரும், தவெக உறுப்பினருமான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் என்பவரிடமும், பேட்டி எடுத்துள்ளனர். அப்போது கோகுல், தனியார் யூடியூபர்களிடம் 200 ரூபாய் அடிமைகள் என விமர்சித்தார்.
அதற்கு அவர்கள் இத்தனை ஆண்டுகளாக திமுக நடத்திய கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததில்லை. கரூரில் ஏன் இப்படி நடந்தது என அந்த ரசிகரிடம் திருப்பி கேள்வி கேட்டுள்ளனர். அப்போது யூடியூபர்களிடம் கோகுல் மிரட்டும் தொனியில் கோகுல் பேசினார்.
இந்த நிலையில், சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்ததாக தவெக உறுப்பினரான கோகுல் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோகுல் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.