தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக தலைநகர் சென்னையிலும் கூட அடிக்கடி அறிவிகப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மின்வெட்டு மணிக்கணக்கில் ஏற்படுவதால், தூக்கமின்றி மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பல இடங்களில் தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தில் பின்புறம் உள்ள மின்சார கேபிள் பெட்டியிலிருந்து 14 பியூஸ் கேரியர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், விசாரணையை தொடங்கிய போலீசார், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், வினித்குமார் ஆகிய 2 பேர் திருட்டியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் 17 பியூஸ் கேரியர்களை செங்குன்றம் அருகே ரூ.1,500க்கு விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் மீதும் வாகன திருட்டு, இரும்பு திருட்டு போன்ற பல்வேறு திருட்டு புகார்கள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
