எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுகவில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, துணை முதலமைச்சரும் கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், எதிர்வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த சுமார் 40 பேருக்கு கட்டாயமாக எம்.எல்.ஏ சீட் வழங்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், அடுத்தக்கட்ட தலைமுறையை அரசியலில் முன்னிலைப்படுத்தவும் இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில் பட்டியலில் இடம்பெற்றோர் குறித்த விபரங்களையும், அவர்களுக்கு சீட் வழங்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் திமுக தலைமை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாம். ஆனால், உதயநிதியின் இந்த அதிரடி நகர்வு கட்சியின் சீனியர் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் 40 சீட்டுகள் இளைஞரணிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள், சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இது காலம் காலமாக கட்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டும் செயல் எனவும், தாங்கள் இத்தனை காலமாக கட்டிக்காத்த செல்வாக்கு சரியக்கூடும் எனவும் சீனியர்கள் தங்களுக்கு நெருக்கமான வட்டாரங்களில் புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கட்சியின் எதிர்காலத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் மகனின் நியாயமான கோரிக்கை, மறுபுறம் கட்சியின் வெற்றிக்கு நீண்டகாலமாக அடித்தளமாக இருந்த மூத்த தலைவர்களின் அதிருப்தி என தலைமை தவித்து வருகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சிக்குள் எந்தவித உட்கட்சிப் பூசலும் வெடிக்காமல், சீனியர்களின் அனுபவத்தையும் இளைஞர்களின் வேகத்தையும் இணைத்து முதலமைச்சர் எப்படி இந்த விவகாரத்தை சுமுகமாகத் தீர்க்கப் போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version