சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை (நவ.18) தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை கண்ட பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை கமிஷனர் கௌதம், உதவி ஆணையர் பிரதீப் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அந்த பகுதியில் குப்பை சேகரிக்கும் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. சாலையில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்து வெளியே போடப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்று அதன் மூலம் வாழ்ந்து வந்துள்ளார். பகலில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அவர், இரவில் அங்குள்ள கடைகளுக்கு வெளியே படுத்துறங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை?. சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரின் தலை மீது யாரோ கல்லை தூக்கி போட்டுக் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், இரவு நேரத்தில் அரங்கேறி இருக்கும் இக்கொடூர கொலையால் அப்பகுதியினர் இரவு நேரத்தில் வெளியில் செல்லவும் தயங்கி வருகின்றனர்.

அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார்? கொலைக்கான காரணம் என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இதற்காக 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version