வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணை தேனி, மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இன்றி வைகைஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து அணைக்கான நீர்வரத்தும் மிகவும் குறைவாக இருந்து காணப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் , முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பாலும், வைகைஅணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு 949 கன அடியாக இருந்த வைகை அணைக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு 1887 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 54.36 அடியில் இருந்து தற்போது 55.36 அடியை எட்டி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 55.36 அடியாகவும்,அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1887 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 2770 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வைகைஅணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.