தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். பிப்ரவரி மாதமே விருப்ப மனுக்களைப் பெற்று முடித்த நிலையில், மார்ச் 10-ம் தேதி முதல் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களில் தகுதியானவர்கள் மட்டும் குறுஞ்செய்தி அல்லது அழைப்பு மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இந்த நேர்காணல் முடிந்தவுடன், இரண்டு வாரங்களுக்குள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 10 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்விலும் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் மற்ற பிரதான கட்சிகளுக்கு முன்னதாகவே வேட்பாளர் நேர்காணல் மற்றும் தேர்வுப் பணிகளைத் தொடங்குவது, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
