மாணவர்கள் Dropout சதவீதம் அதிகமாக இருந்ததே 2017 – 18ம் ஆண்டில் செங்கோட்டைய பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தான் என்று விஜய்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை (டிச.18 ) நடைபெற்றது. அப்போது பேசிய த.வெ.க தலைவர் விஜய், “தி.மு.க ஆட்சியில் எல்லாரும் டிகிரி படித்து முடித்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மை என்றால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருந்தது யாருடைய ஆட்சியில்? அரசுப் பள்ளியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என்று 207 அரசுப் பள்ளிகள் மூடியது யாருடைய ஆட்சியில்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “இதில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று டிராமா வேறு போடுகிறார்கள்” என்று விஜய் கடுமையாக சாடினார்.
இந்தநிலையில், விஜய்யின் குற்றச்சாட்டு வருத்தமளிப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அதாவது, மாணவர்கள் Dropout சதவீதம் அதிகமாக இருந்ததே 2017 – 18ம் ஆண்டில் செங்கோட்டைய பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தான் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். அதற்கான தரவுகளை வழங்கியுள்ளதாக கூறிய அமைச்சர், பழைய செய்திகளை வைத்து பேசும் விஜய் கொஞ்சம் அப்டேட் ஆகவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
