தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை மறுநாள் (ஏப்ரல் 2) பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் (ECI) முறையான அனுமதி கோரி தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அன்று காலையில் திருச்சி கிழக்குத் தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு, அதனைத் தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட முக்கியப் பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். தவெகவின் செங்கோட்டையன் இதற்கு அனுமதி கேட்டு மனு ஒன்றை காவல் ஆணையரிடம் வழங்கினார். சென்னையில் நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, திருச்சியில் கூடுதல் திட்டமிடலுடன் களமிறங்க அவர் தயாராகி வருகிறார்.
காவல் பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகின்றது. விஜய்செல்லும் வழியெல்லாம் வாகனங்கள் பின்பற்றக்கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.
முன்னதாக, நேற்று பெரம்பூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், அங்கு முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் அத்தகைய சிக்கல்கள் எழாத வண்ணம் முன்கூட்டியே அனுமதி பெறவும், போதிய பாதுகாப்பு கோரவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
