தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருவதாகப் பேசப்படுகிறது. ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண், விஜயுடன் நல்ல நட்புறவில் இருப்பதால், அவர் மூலமாக விஜய்க்குத் தூது அனுப்பப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில், திமுக-அதிமுக-நாதக என நான்கு முனைப் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூட்டணி முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தச் சூழலில், தமிழக பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர் ANS பிரசாத் இன்று (மார்ச் 8, 2026) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள என்டிஏ கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திமுகக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளார் என்றும், அதனால் பல சிறிய கட்சிகளை இணைத்து பெரிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் பிரசாத் குற்றம்சாட்டினார்.
அண்மையில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டதால், திமுகவுடன் நீண்ட காலமாக இருக்கும் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய கட்சிகளை சேர்ப்பதற்காக திமுக எடுத்த முடிவுகள், கட்சியில் நீண்ட காலமாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மனவேதனை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஊழல், லஞ்சம், விலையேற்றம் போன்றவை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும் என்றும் கூறினார்.மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜனநாயகம் பாதிக்கப்படும் என்றும், அரசை விமர்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
விஜயை நோக்கி பேசிய அவர், திமுகக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.ஓரணியில் திரள வேண்டும் என்றும், உண்மையாக திமுகவை தடுக்க விரும்பினால் அதிமுக–பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.மேலும், தவறான ஆலோசனைகளை நம்பாமல், திமுகக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
