தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தவெக தலைவர் விஜய், கடந்த 30ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில், தனக்கு இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், தன் தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகளுக்கு கொடுத்துள்ள கடன் தொகை விவரம் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தார்.

பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவில் எந்தவித காவல்துறை வழக்கும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். பின்னர் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள விஜய், இந்த வழக்குடன் சேர்த்து 2025ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை ஏன் பெரம்பூர் மனு தாக்கலில் அவர் குறிப்பிடவில்லை என பரவலாக பேச்சு எழுந்தது.

தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு 2025ஆம் ஆண்டு முதல் மாநாடுகளை நடத்த துவங்கினார். அதன்படி கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் தவெக தலைவர் விஜய் மாநாடு நடத்தினார். இதில், அவர் ரேம்ப் வாக் செய்தபோது, அந்தப் பாதையில் ஏறியவர்களை அவரது பாதுகாவலர்கள் தூக்கி கீழே வீசினர். இது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரையில் பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த வழக்கை திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்புமனுவில் விஜய் தெரிவித்திருந்தார். இந்த குற்ற வழக்கு பற்றி காவல்துறையிடமிருந்து எந்தவித சம்மனோ தகவலோ வரவில்லை. தற்பொழுதுதான் இந்த வழக்கின் விவரம் குறித்து தெரியவந்ததால் இவ்வழக்கு குறித்து இதில் குறிப்பிட்டுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரம்பூர் வேட்புமனுவிற்கான கூடுதல் பிரமாணப் பத்திரத்தை விஜய் தாக்கல் செய்தார். பெரம்பூர் வேட்பு மனு தாக்கலில் 2025 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் தகவல் குறிப்பிடப்படாமல் இருந்ததை தற்போது கூடுதல் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் மதுரை வழக்கு மற்றும் கொளத்தூர் வழக்கு ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் தற்போது கூடுதல் பிரமாண பத்திரமாக பெரம்பூர் தொகுதிக்கும் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.404 கோடி என விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நேற்று தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் இந்த மதிப்பு ரூ.410 கோடியாக அதிகரித்துள்ளது.

வெறும் நான்கு நாட்களில் விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.6 கோடி வரை அதிகரித்ததற்குக் காரணமாக, அவரது பிரத்யேகப் பிரச்சார வாகனத்தின் மதிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதல்முறை தாக்கல் செய்த மனுவில் தனது பிரச்சார வாகனத்தின் (Campaign Van) மதிப்பைக் கணக்கிடுவதில் விடுபடல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வாகனத்தின் மதிப்பான ரூ.6 கோடியைச் சேர்த்து புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவரது மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.410 கோடியாக உயர்ந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version