வரும் 25-ம் தேதி விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை தொடர்ந்து பொதுவெளியில் வராமல் இருந்து விஜய், ஈரோட்டில் பெரும் பொதுக்கூட்டம் நடத்தி மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை காட்டினார். செங்கோட்டையனை பயன்படுத்திக்கொண்டு கொங்கு மண்டலத்தை பிடிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடத்து வருகிறது.
இருப்பினும், கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனைகளால் தவெகவில் சற்று அமைதி நிலவி வருகிறது. ஆனாலும் மற்ற கட்சிகள் கூட்டணிகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
