தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் மே 7-ம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலில், மதச்சார்பற்ற அரசை அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த முக்கிய அரசியல் நகர்வின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளதாகவும், கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் வெற்றியைப் பாராட்டி ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (மே 7) பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்தப் பதவியேற்பு விழாவில், ராகுல் காந்தி மட்டுமன்றி பல்வேறு தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி ஆட்சி அல்லது வெளி ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் வருகை தவெக – காங்கிரஸ் இடையிலான புதிய அரசியல் உறவின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
