கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தற்போது அக்கட்சியுடன் உள்ள உறவை முறித்துக்கொண்டுள்ளார். திமுக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, “வரும் தேர்தலில் விவசாயிகள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை; மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பது என்பது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமானது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இது ஆளுங்கட்சித் தரப்பில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் காவிரி நீர் விவகாரம், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நிலவும் குளறுபடிகள் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற 38 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி பி.ஆர்.பாண்டியன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், மார்ச் 31-ஆம் தேதி திருச்சியில் மாநில அளவிலான விவசாயிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, 2026 தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவுள்ளோம் என அவர் அறிவித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அல்லது அதிமுக – பாஜக கூட்டணி என யாருக்கு விவசாயிகள் ஆதரவு திரும்பப் போகிறது என்பது மார்ச் இறுதிக்குள் தெரியவரும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version