2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், “மதிமுக சார்பில் நாங்கள் விருப்பப்பட்டியல் கொடுத்திருந்தோம். அதில் உள்ள நான்கு தொகுதிகளைத் தற்போது எங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.
நாங்கள் கேட்ட அதே தொகுதிகள் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது எங்களுக்குப் பெரும் வருத்தத்தைத் தருகிறது” என்று தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு இருந்தும், கூட்டணி தர்மத்திற்காக 4 இடங்களை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; ஆனால் நாங்கள் இப்போது சிரித்துக் கொண்டே அழுகின்ற நிலையில் இருக்கிறோம்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஒதுக்கப்பட்டுள்ள அந்த நான்கு தொகுதிகள் எவை என்பது குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கட்சித் தலைமை முறைப்படி அறிவிக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுகவுக்கு, இந்த முறை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
