2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு ஏற்கனவே 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக தரப்பில் அளிக்கப்பட்ட 25 விருப்பத் தொகுதிகளின் பட்டியலில் இருந்து, 7 தொகுதிகளுக்கு திமுக தலைமை பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தெரிகிறது. ஆனால், மீதமுள்ள 3 தொகுதிகளை இறுதி செய்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.

குறிப்பாக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற  தொகுதியான விருத்தாசலத்தை தேமுதிக ஒற்றைக்காலில் நின்று கேட்கிறது. ஆனால், அதே தொகுதியைத் தனது விருப்பப்பட்டியலில் வைத்துள்ள காங்கிரஸும் விடாப்பிடியாக இருப்பதால், திமுக தலைமை தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.

விருத்தாசலம் தொகுதியில் நிலவும் மற்றொரு சிக்கல் என்னவென்றால், அங்கு பாமக சார்பில் பலமான வேட்பாளர் களம் இறக்கப்பட உள்ளதால், அத்தொகுதியில் திமுகவே நேரடியாகக் களம் இறங்கினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என அறிவாலயத் தரப்பு கருதுகிறது. இதேபோல், ரிஷிவந்தியம் தொகுதியிலும் சிக்கல் நீடிக்கிறது.

அங்குத் தற்போது திமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் வசந்தம் கார்த்திகேயன் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால், அத்தொகுதியைத் தேமுதிகவுக்கு விட்டுக் கொடுக்க திமுக தயக்கம் காட்டி வருகிறது. இந்த இழுபறியால் தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தொகுதி விவரம் வெளியாகவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version