தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் தல்லைமையகம் அறிவாலயத்தில் தேர்தல் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக விசிக வளர்ந்துள்ள நிலையில், அதற்கு ஏற்றாற்போல் கூடுதல் இடங்களைப் பெறுவது கட்சியின் வளர்ச்சிக்கு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
திமுக குழுவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். 2026 தேர்தலானது வழக்கமான பொதுதேர்தல் அல்ல. வலது சாரி சக்திகளை காலுன்ற விடக்கூடாது. மதசார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு இடம் அளிக்க வேண்டும். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடம் இல்லை.
திமுகவுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. எங்களுக்கான அதிகார பகிர்வு குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். முதலமைச்சருடன் பேசி பிறகு மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளனர். எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகார பகிர்வு கேட்டு உள்ளோம். பாண்டிச்சேரியில் ஒரு தனி தொகுதி, இரண்டு பொது தொகுதிகள் என 3 தொகுதிகள் கேட்டு உள்ளோம். அதிகார பகிர்வு என்பது தொகுதி தான்.
தேசிய அளவில் பெரிய சக்தி என்பதால் காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை அறிவிக்கிறார்கள் அதில் நான் கருத்து சொல்ல முடியாது. எப்படி ஆனாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
