திருவள்ளூரில் 10வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தனியாக நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மர்ம நபர் பின் தொடர்ந்து சென்று கடத்தியுள்ளார். அருகேயிருந்த மாந்தோப்புக்குள் சிறுமியை தூக்கிச் சென்றவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்ய, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் மேற்பார்வையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில் 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. ஆந்திர மாநில சூலூர் பேட்டையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் அந்நபரின் புகைப்படத்தை சிறுமிடம் காட்டிய போது, அவர் தான் குற்றவாளி என்பதை சிறுமி உறுதிப்படுத்தினார். அதனை தொடர்ந்து அந்நபரை கைது செய்த போலீசார், அவரை தமிழ்நாடு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.