இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன், காஞ்சிபுரத்தில் இன்று கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கையை கண்டிப்பதாகவும், அதற்கு பதிலாக 200 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கோவளத்தில் நடைபெற்ற தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “புதிய கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளும் முதல்வர் விஜய்க்கு எங்களது வாழ்த்துகள்” என்றார்.
அந்தக் கூட்டத்தில் சிபிஐ பங்கேற்காதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “நாங்கள் அங்கு சென்றிருந்தால் இயல்பாக சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கும். அது அந்தக் கூட்டத்தின் நோக்கத்தையும், அங்கிருந்த சூழலையும் பாதிக்கும் என்பதால் நாகரிகம் கருதி பங்கேற்கவில்லை. ஆனால் வெளியில் இருந்து எங்களது ஆதரவு எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்தார்.
திமுக ஆளுநரிடம் அளித்துள்ள புகார் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, முழுமையான விவரங்களை அறிந்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றும், தங்களது உரிமைகளை வலியுறுத்த யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்; அதில் தவறு இல்லை என்றும் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் தற்போதைய அரசு முழு ஐந்தாண்டு காலமும் நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமும், கூட்டணிக் கட்சிகளின் விருப்பமும் ஆகும். ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவே மாநிலத்திற்கு நல்லது” என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார்.
