2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியல் இன்று வெளியானது. இதில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘கட்சிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் செயல்வீரர் அவர். ஒரேயொரு தொகுதியின் எல்லைக்குள் மட்டும் முடங்கிக்கிடக்காமல், மாநிலம் முழுவதும் பணியாற்ற வேண்டும் அவர் முடிவெடுத்தார்’ என பதிலளித்தார்.
முன்னதாக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக பேசிய அவர், தேர்தல் முரசு கொட்டப்பட்டுவிட்டது. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குச் சேவையாற்றிய, தமிழ்நாட்டு மக்களுக்குப் பல ஆண்டுகளாக,பல தசாப்தங்களாக சேவையாற்றி வரும், தமிழ்நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட, மிகுந்த அனுபவம் வாய்ந்த தொண்டர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாநில அளவிலான ஆலோசனைகள் மற்றும் ஒவ்வொரு வேட்பாளரும் தான் எங்கு போட்டியிட விரும்புகிறார்கள் என்ற அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அனைத்தையும் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” என தெரிவித்தார். மேலும், பாஜக தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டதாகவும், அறிவிப்புகள் குறித்து தலைமையுடன் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என கூறினார்.

