தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட மகுடம் என்ற படத்தில் விஷால் நடித்து வந்தார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இயக்குநர் ரவி, இப்படத்தில் இருந்து விலக, தானே இப்படத்தை இயக்குவதாக அறிவித்தார் விஷால். இது தொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிட்ட அவர், டத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் டீசரும் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
ஜூலை மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தில் அவர் போட்டிருந்த 3 கெட் அப்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் நடிகர் விஷால்.

