தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை வரும் ஏப்ரல் 2ம் தேதி கருணாநிதியின் கோட்டையான திருவாரூரில் இருந்து தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தனது தந்தை வழியில், சென்டிமென்ட்டாகத் திருவாரூர் மண்ணில் இருந்து தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத் தொகுதிகளை அவர் வலம் வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 6-ம் தேதி அவர் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் போட்டியிடுவதற்காக அதிகாரப்பூர்வமாக வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வரின் இந்தப் பிரசாரப் பயணம் சுமார் 20 நாட்கள் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிகத் தீவிரமாக நடைபெறவுள்ளது. தனது அரசின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் அவர் உரையாற்றத் திட்டமிட்டுள்ளார். இறுதியாக, தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 21-ம் தேதி தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பிரம்மாண்டமான பேரணியுடன் தனது தேர்தல் பிரசாரத்தை அவர் நிறைவு செய்யவுள்ளார்.
