கோவை, இடையர்பாளையம்- வடவள்ளி சாலையில் இன்று(31.05.2025) காலை பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அங்கு உள்ள சிக்னல் அருகே அந்த வழியாக சென்ற லாரி உரசியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில், ஹெல்மெட்டுடன் சேர்ந்து அப்பெண்ணின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் இறந்து கிடப்பதையும், லாரி ஒன்று சென்று கொண்டு இருப்பதையும் பார்த்தனர். உடனே அந்த லாரியை வழி மறித்து செல்ல விடாமல் சிறை பிடித்தனர். சம்பவம் குறித்து அறிந்து விபத்து நடந்த பகுதிக்கு கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்றனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் யார் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பையில் இருந்த ஆதார் அடையாள அட்டை மூலம் அவரது பெயர் ஜாஸ்மின் ரூத் (வயது 39 ) என்பதும், வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஜாஸ்மின் ரூத் வடவள்ளியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஷோரூமுக்கு சென்று வந்து உள்ளார். வழக்கம் போல வீட்டில் இருந்து காலை வேலை சென்ற போது விபத்தில் சிக்கியதை போலீசார் கண்டறிந்தனர். இதற்கு இடையே பொதுமக்கள் சிறை பிடித்த டிப்பர் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், கரூரை சேர்ந்த பெரியசாமி என தெரியவந்தது. அவர் விபத்தை நான் ஏற்படுத்தவில்லை என்றும் பொதுமக்கள் தவறுதலாக ரோட்டில் சென்ற தனது வாகனத்தை சிறை பிடித்து விட்டதாகவும் போலீசாரிடம் கூறி உள்ளார்.
இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். எனவே ஜாஸ்மினின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய லாரி எது? என்பதை கண்டுபிடிக்க அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.