தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து போடி செல்லும் அரசுப் பேருந்தில் துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த 4 பெண்கள் பயணம் செய்துள்ளனர். தங்களது நிறுத்தமான துரைராஜபுரம் காலனிக்கு வந்த போது பேருந்தை நிறுத்துமாறு நடத்துநரிடம் கூறிய போது, பேருந்து இங்கே நிற்காது என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த நிறுத்தமான B.மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தத்திலாவது பேருந்தை நிறுத்துங்கள் என்று பெண்கள் கூறிய போது, அங்கேயும் நிற்காது போடியில் மட்டும் தான் நிற்கும் என்று கூறியுள்ளார் நடத்துநர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஓட்டுநரிடம் சென்று பேருந்து நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர்.
நான்கு பெண்களும் கெஞ்சி கேட்டும் ”பேருந்து நிற்காது, நீங்கள் நிறுத்த சொன்னால் நாங்கள் நிறுத்த வேண்டுமா? உங்களுக்காகத்தானே அரசாங்கம் ஓசியில் பஸ் விட்டுள்ளது. அந்த பஸ்ஸில் ஏறி போக வேண்டியது தானே? எதற்காக எங்கள் உயிரை எடுக்கிறீர்கள் என்று? பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள்,
பேருந்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் 4 பேரும் பேருந்தில் இருந்து குதிப்போம் என்று பெண்கள் கூச்சலிட்டதால், வேறு வழியில்லாமல் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக பேருந்தின் முன்பக்கத்தில் சென்று நான்கு பெண்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி தாலுகா காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இப்பகுதி மக்கள் நாள்தோறும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டினர். பெண்களை ஓட்டுநரும், நடத்துநரும் ஏளனமாக பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியவர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் உமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வரிசைக் கட்டி நின்றன.
இதற்கிடையில் இந்த போக்குவரத்து நெரிசலில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வனிடம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் புகார் மனு அளித்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.