கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த பல திட்டங்களில் மக்களை குறிப்பாக பெண்களை பெரிதும் கவர்ந்த திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். வேலைக்கு செல்லாமல் வீட்டு வெலைகளை மட்டும் செய்து வரும் பெண்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது இந்தத் திட்டம். அதன்படி கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.12,000கோடி ஒதுக்கப்பட்டது.
தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது தேர்ந்தெடுக்கப்படும் மகளிருக்கு எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போது வரை 1கோடியே 14 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில், பலரும் தங்களுக்கும் உரிமைத் தொகை வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, புதிதாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெறப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். வழக்கம்போல் ஆன்லைனில் விண்ணப்பிக்காமல் நேரடியாகவே விண்ணப்பங்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி மக்களிடம் முதல்வர் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.
அப்போது புதிதாக மகளிர் உரிமை கேட்பவர்கள் விண்ணப்பங்களை வழங்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் விண்ணப்பங்களை பரிசீலித்து ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.