சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கோவையில் வசித்து வந்துள்ளார். இவர் ஒவ்வொரு வார இறுதியிலும், தனது குடும்பத்தை பார்க்க, கோவை செல்வது வழக்கம். இவரது செல்போனுக்கு ”போட்டிம்” என்ற ’இன்டர்நேஷனல் ஆப்’ மூலம் கடந்த மாதம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், ”உங்கள் குடும்பத்தை பார்க்க கோவைக்கு வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் கொலை செய்து விடுவேன்” எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் ’சென்னைக்கு வந்து கொலை செய்து விடவும் தயங்கமாட்டேன்’ என்று அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தினார். பிறகு கோவையில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, மிரட்டல் விடுத்தது கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்சன் என்ற இளைஞர் என்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்க, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த எண் நாராயணன் என்ற பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டு, ஸ்வீட்சன் என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை போலீசார் கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ஸ்வீட்சன்(30) என்ற இளைஞர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .தொடர்ந்து கோவைக்கு வந்த சென்னை தனிப்படை போலீசார் ரத்தினபுரியில் உள்ள ஸ்வீட்சன் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்ய சென்றனர். போலீசாரை பார்த்த ஸ்வீட்சன் வீட்டின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றார். போலீசார் அவரை துரத்திச் சென்று பிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து ஸ்வீட்சனுக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஸ்வீட்சன் பணக்கார தொழிலதிபர்களின் மனைவிகளிடம் ஆசை வார்த்தை பேசி வலையில் விழ வைப்பதுடன், அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகள் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அவ்வாறு சென்னை தொழிலதிபரின் மனைவியிடமும் தனது வேலையை காட்டியுள்ளார் ஸ்வீட்சன். சென்னை தொழிலதிபர் வார இறுதியில் கோவை வருவது, ஸ்வீட்சனுக்கு இடையூறாக இருந்ததால், போன் செய்து மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் அம்பலமானது.
சென்னை போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜரான ஸ்வீட்சனின் வலையில் விழுந்த கோவை சிங்காநல்லூர் நிறுவன உரிமையாளரின் மகள், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு தலைமறைவான ஸ்வீட்சனை சென்னை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 6 வருடங்களுக்கு முன்பு நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சமீபத்தில் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதே பாணியில் ஒரே ஒரு இளைஞர் 40-க்கும் மேற்பட்ட வசதிபடைத்த பெண்களை குறிவைத்து நகை, பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.