தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், திமுக அரசின் தற்பெருமைகளே அதிகமாக இருந்தன என்று தவெக அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் முதல்வரை பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறார் நிதியமைச்சர். முதலமைச்சரை பாராட்டுவதையும், தற்பெருமை பேசுவதையும்விட இந்த பட்ஜெட்டில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.
11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிப்பதாக பெருமை பேசியிருக்கிறார் நிதியமைச்சர். அதேநேரத்தில் தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்ற தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியையும் கூறியிருக்கிறார். பொருளாதாரத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும்போது இத்தனை லட்சம் கோடி ரூபாயை எதற்காக கடன் வாங்க வேண்டும்?
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யாத திமுக அரசு எதற்காக இத்தனை கோடி ரூபாயை கடன் வாங்கியது என்று புரியவில்லை. தமிழக அரசு வாங்கிக் குவித்துள்ள இந்த கடனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகளை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
தூய்மைப் பணியாளர்கள் தொடங்கி மருத்துவ பணியாளர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அவர்களை தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் சூழலுக்கு கொண்டுவந்த நிலையில், தமிழகத்தில் இப்போது எல்லாமே சுபிட்சமாக இருப்பதுபோல் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர். எனவே இதற்கு ஜீரோ மார்க் மட்டுமே கொடுக்க முடியும்.
இந்த பட்ஜெட்டில் இருக்கும் ஒரே ஆறுதல், இது திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதுதான். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு, மக்களின் நன்மைக்காக பல திட்டங்களுடன் கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
