பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும்படி, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, அதன் பின் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

இதேபோல, திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.எல்.ஏ.- எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தொடர்ந்த தேர்தல் வழக்கு,

பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில்  தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்த எஸ்.ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கு,

குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் வெற்றியை எதிர்த்து சிபிஐ-எம்.எல். வேட்பாளர் அந்தோணி முத்து தொடர்ந்த தேர்தல் வழக்கு,

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா வெற்றியை எதிர்த்து வாக்காளர் சி.கீதா தொடர்ந்த தேர்தல் வழக்கு,

சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. கே.சிவக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு,

சீர்காழி தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. ஆர்.செந்தில்செல்வன் வெற்றியை எதிர்த்து வாக்காளர் எஸ்.வாசு தொடர்ந்த தேர்தல் வழக்கு ஆகியன  நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்  விசாரணைக்கு வந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு அறிவுறுத்தி, மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டார்.

இன்று இரு நீதிபதிகள் முன் 12 தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு, நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version