கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் புதிதாக சிற்றோடைகள், அருவிகள் உருவாகி நொய்யல் ஆற்றுடன் இணைந்து, சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள ஆறு, குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால் வழியோர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு வறண்டு காணப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று கோடை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அதனைக் கண்டு குளித்து மகிழ சுற்று வட்டாரப்பகுதி பொதுமக்கள் செல்கின்றனர். இதனால் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களை, பொதுப் பணி துறையினரும், காவல் துறையினரும் திருப்பி அனுப்புவதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் அப்பகுதி சிறுவர்கள் ஆபத்தை உணராமல் மீன் பிடித்து விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் மீன் பிடித்து விளையாடும் சிறுவர்களை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version