திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதியில் முருகன், முனியப்பன், மாயி, இளங்கோ உள்ளிட்ட 9 நபர்கள் சட்டவிரோதமாக கனிமவள குவாரிகளை நடத்தி வருகின்றனர். அது தொடர்பாக திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோத மணல் குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், அவர்களுக்கு அதிக அபராதம் விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, “குவாரிக்கு சீல் வைக்கப்பட்ட பின்னரும் சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், “விதிமீறலில் ஈடுபட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கிருந்த இயந்திரங்களையே சரிபார்த்து உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டது.
அதோடு சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி அது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இனிமேல் திண்டுக்கல் மாவட்டத்தில்”சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் சட்டவிரோத குவாரி விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.