பாதுகாப்புத்துறையில் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டிவருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’-இன் 136-வது அத்தியாயத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறையில் இந்தியா சமீபத்தில் பெற்றுள்ள சாதனைகளை பெருமையுடன் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இந்த மாதம் பினாகா நீண்ட தூர வழிகாட்டி ராக்கெட் (Pinaka Long Range Guided Rocket) சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாகவும், இது இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று பிரதமர் பாராட்டினார்.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு ‘குஷா’ (Kusha) நீண்ட தூர தரை-வான்வழி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட INS மகேந்திரகிரி என்ற நவீன போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டிருப்பது ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னிறைவு இந்தியா) திட்டத்தின் வலிமையை வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்திப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு உற்பத்தி, பாதுகாப்பு ஏற்றுமதி மற்றும் நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், உலக நாடுகளின் நம்பிக்கை இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் மீது அதிகரித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்தில் இந்தோனேஷியாவிற்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த அவர், அந்தப் பயணத்தின் போது பிரம்மோஸ் (BrahMos) மற்றும் அஸ்திரா (Astra) ஏவுகணைகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version