ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் டிராப் (Trap) பிரிவில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை நீரு தண்டா படைத்துள்ளார்.
26 வயதான நீரு தண்டா, இறுதிப்போட்டியில் 30 இலக்குகளில் 27 இலக்குகளைத் துல்லியமாகச் சுட்டு, பிரான்ஸ் முன்னாள் உலக சாம்பியனும் ஒலிம்பியனுமான கரோல் கோர்மெனியரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன் தகுதிச்சுற்றில் 125-க்கு 121 புள்ளிகள் பெற்று தேசிய சாதனையும் படைத்திருந்தார்.
இந்த வெற்றி குறித்து பேசிய நீரு தண்டா, “இது இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணிக்கும், இந்தியாவுக்கும், குறிப்பாக எனக்கும், என் குடும்பத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும், போபால் துப்பாக்கிச் சுடுதல் அகாடமிக்கும், தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்திற்கும் (NRAI), இந்திய விளையாட்டு ஆணையத்திற்கும் (SAI) மிகவும் சிறப்பான நாள்” என்றார்.
இறுதிப்போட்டியில் அழுத்தத்தை எவ்வாறு சமாளித்தீர்கள் என்ற கேள்விக்கு,
“எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. அங்கு நின்றவர்கள் உலக சாம்பியன்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுடன் நானும் நிற்கிறேன் என்றால் நானும் ஒரு சாம்பியன்தான். ‘நான் வெற்றி பெறுவேன்’ என்று என் மனதுக்கே நான் சொல்லிக்கொண்டேன். அதுவே எனது வெற்றியின் ரகசியம்” என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு இலக்கையும் புதிய சவாலாகக் கருதி சுட்டதாகக் கூறிய அவர்,
“ஒவ்வொரு ஷாட்டுக்கும் முன்பும் மனதை மீண்டும் ஒருமுகப்படுத்திக் கொண்டேன். கடவுள் கொடுத்த வாய்ப்பாக நினைத்து 200 சதவீத அர்ப்பணிப்புடன் செயல்பட்டேன்” என்றார்.
“வாழ்க்கையில் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் ஒருபோதும் கைவிடக் கூடாது. எந்த சூழலிலும் தொடர்ந்து போராட வேண்டும். உறுதியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் எனத் தெரிவித்த நீரு தண்டா,
அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டி, உலக சாம்பியன்ஷிப் மற்றும் இறுதியாக லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

