புதுச்சேரியில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அரசியலில் கட்சி மாறுபவர்கள் குறித்து தற்காலிக சபாநாயகரும், தமிழ்நாடு அமைச்சரும் பேசி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அமலோற்பவம் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிக்கில்பால் மைதானம் திறப்பு மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் அதிமுக உப்பளம் சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகனும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேசும்போது பள்ளிக்கூடத்தி வளர்ச்சி குறித்தும் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து அரசியல்பக்கம் பேச்சைத் திருப்பியவர்,  ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்த கட்சியின் மீது விசுவாசம் வைத்துள்ளார்கள். வேறு கட்சியில் இருப்பவர்களை மனம் மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன் என கூறினார்…

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக அமைச்சர் ஆனந்த்,  கட்சியில் விசுவாசமா இருக்கணும், மத்ததெல்லாம் பேசிட்டு அழைத்து வரக்கூடாது என்று அதிமுக அன்பழகன் தெரிவித்தார். நீங்க ஒழுங்கா வெச்சிருந்தா அவங்க ஏன் இன்னொரு இடத்துக்கு வராங்க. நீங்க ஒழுங்கா வைக்காத காரணத்தினால் தான், எந்த இடம் நல்ல இடம், எந்த இடம் ஊழல் இல்லாத இடம் என்று அவங்களுக்கு தெரிந்து அவர்கள் வருகின்றனர் என பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்த நான், இன்று ஒரு அமைச்சராக இருக்கிறேன் என்றால் முதலமைச்சர் தளபதி தான் காரணம் எனத் தெரிவித்தவர், தமிழக முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

எந்த ஒரு தவறும் செய்யாமல் எங்களுடைய ஆட்சி தமிழ்நாட்டில் தொடரும். ஐந்து வருடங்கள் மட்டுமில்லை 15,20 வருடங்கள் ஆனாலும் எங்களுடைய தளபதி தான் முதலமைச்சராக இருப்பார் என உறுதிப்பட தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version