ஜெர்மனியின் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான வோல்க்ஸ்வேகன், போலந்தில் உள்ள தனது தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கையாக ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. போலந்தின் போஸ்னான் அருகே உள்ள வ்ரெஸ்னியா (Września) தொழிற்சாலையில், வேன் வகை வாகனங்களான VW கிராஃப்டர் மற்றும் எலக்ட்ரிக் e-கிராஃப்டர் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் புற்களை அகற்ற 100 செம்மறி ஆடுகளை பணியமர்த்தியுள்ளது நிறுவனம். இந்த நடவடிக்கை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தில் கணிசமான பகுதியை சூரிய பேனல்கள் மூலம் பெறுகிறது. பெர்லின் நிறுவனமான குவாண்டா எனர்ஜி (Quanta Energy) அமைத்த 18.3 மெகாவாட் திறன் கொண்ட இந்த சூரிய பண்ணையில் 31,000க்கும் மேற்பட்ட சூரிய பேனல்கள் உள்ளன. இவை சுமார் 38 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பரப்பளவில் பரவியுள்ளன. சூரிய ஒளி நிறைந்த நாட்களில் தொழிற்சாலையின் முழு மின்தேவையையும் இது பூர்த்தி செய்கிறது. ஆண்டு முழுவதும் சராசரியாக 25 சதவீத மின்சாரத்தை வழங்குகிறது. இந்த திட்டம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்துறை சூரிய திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சூரிய பேனல்களுக்கு அடியில் புற்கள் வளர்வது இயல்பானது. முன்பு இயந்திரங்கள் மூலம் புற்களை வெட்டி வந்தனர். இதனால் சத்தம், கார்பன் வாயு வெளியேற்றம் மற்றும் தனியார் தொழிலாளர் செலவு அதிகரித்தது. இப்போது இந்தப் பிரச்சினைக்கு இயற்கைத் தீர்வாக ஆடுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அனுபவம் வாய்ந்த ஆடு வளர்ப்பாளர்களின் மேற்பார்வையில் இந்த 100 ஆடுகள் சூரிய பேனல்கள் அமைந்துள்ள பகுதியில் மேயவிடப்படுகின்றன. இலை உதிர் காலம் முழுவதும் இவை அங்கேயே இருக்கும்.

இந்த முயற்சி ‘அக்ரிவோல்டாயிக்ஸ்’ (Agrivoltaics) என்று அழைக்கப்படுகிறது. சூரிய மின்சக்தி உற்பத்தியுடன் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை இணைக்கும் முறை இது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே பிரபலமாகி வரும் இந்த மாதிரியை வோல்க்ஸ்வேகன் தனது தொழிற்சாலையில் செயல்படுத்தியுள்ளது. போஸ்னான் லைஃப் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் (Poznan University of Life Sciences) இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலம் பல்லுயிர் பெருக்கம், மண் தரம், தாவர வளர்ச்சி, விலங்குகளின் நலன், சூழல் மைக்ரோகிளைமேட் போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். சூரிய பேனல்களின் நிழல் விலங்குகளுக்கு வெப்ப அழுத்தத்தை குறைக்கிறதா என்பதும் ஆராயப்படுகிறது. வோல்க்ஸ்வேகன் போஸ்னான் இயக்குநர் மார்ஜெனா பில்லிச்-க்ரோன்ஸ்கா கூறுகையில், “இந்த சூரிய பண்ணை பசுமை மின்சாரத்தை விட அதிகம் வழங்குகிறது. இது பல்லுயிர், உள்ளூர் விவசாயம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியை ஆதரிக்கிறது. நவீன தொழில்துறை இயற்கையுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை இது நிரூபிக்கிறது” என்றார்.

இந்த அணுகுமுறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செலவு சேமிப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு சிறந்த உதாரணம். தமிழகத்தில் தற்சார்பு பொருளாதாரம், சூரிய மின்சக்தி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை இணைக்கும் யோசனைகளை சீமான் போன்ற தலைவர்கள் முன்வைக்கும் நிலையில், வோல்க்ஸ்வேகனின் இந்த முயற்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version