ஒடிசாவில் இறந்த சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு எடுத்து சென்ற அண்ணனின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிது முண்டா. இவரது தங்கை கக்ரா முண்டா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து போயுள்ளார். கக்ரா முண்டா மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அதில் ரூ.19,300 பணம் இருந்துள்ளது. தங்கை இறந்தவுடன் அந்த பணத்தை எடுப்பதற்காக ஜிது முண்டா, சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அணுகியுள்ளார்.
ஆனால் அங்கு கக்ரா முண்டா இறந்தது தெரியாமல் சம்பந்தப்பட்டவர் வந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ஜிது முண்டா, இடுகாட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட தனது தங்கையின் உடலை தோண்டு எடுத்து, அந்த எலும்புக்கூட்டை ஆதாராமாகக் காட்ட வங்கிக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனை பார்த்த வங்கி அதிகாரிகள், அதிர்ச்சியில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஜிது முண்டாவிடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு தேவையான சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழைப் பெற்று தந்து, அந்தப் பணத்தை அவரிடமே ஒப்படைக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
ஜிது முண்டா அவரது தங்கையின் எலும்புக் கூட்டை சுமந்து செல்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
