திமுக எப்போதும் மக்கள் செல்வாக்குடன் ஜெயித்தது இல்லை என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் சிறு கணக்கு பிழையால்தான் திமுக ஆட்சிக்கு வந்தததாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஏதோ அம்மா உடன் இருப்பது போல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை.
திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று தமிழகம் வரவுள்ளார். இந்தநிலையில், அவரின் வருகையால், பீகாரில் வீசிய பாஜகவின் வெற்றி காத்து, தமிழகத்திலும் வீசும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரம், அவரது தொகுதியான நெல்லைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்வதால் எந்த மாற்றமும் இருக்காது என்று நயினார் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக வாக்குகள் திமுகவுக்கு செல்லாது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
