மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(டிச., 30) மாலை திறக்கப்படுகிறது. நாளை (டிச., 31) அதிகாலை முதல் நெய்யபிஷேகம் துவங்கும்.

மண்டல கால பூஜை முடிந்து டிச., 27- இரவு 10:00 மணி-க்கு நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் துவங்கின. ஆழிகுண்டத்தில் சாம்பல் அப்புறப்படுத்தப்பட்டது. சபரிமலை சன்னிதான சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. மகர விளக்கு காலத்தில் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் எதுவும் இன்று இல்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கும். ஜன., 14- மகர ஜோதி பெருவிழா நடக்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version