இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் மெசேஜ் அனுப்புவார்கள் என்று கூறிய குஷி முகர்ஜி, எந்தவொரு வீரருடனும் என் பெயர் இணைத்து பேசப்பட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தயாராகி வருகிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் ஆட்டம் கடுமையான விமர்சனங்களை பெற்றது. கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், பேட்ஸ்மேனாக போதுமான ரன்களை அவரால் சேர்க்க முடியவில்லை.
கடந்த ஐபிஎல் தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த சூர்யகுமார் யாதவ், அதன்பின் இந்திய அணி ஆடிய 19 டி20 போட்டிகளில் 218 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். 2025ஆம் ஆண்டு ஆடிய 19 இன்னிங்ஸில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என்று சூர்யகுமார் யாதவ் தீவிரமாக போராடி வருகிறார்.
இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியுள்ள கருத்து சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, பாலிவுட் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வருபவர் குஷி முகர்ஜி. அதேபோல் சோசியல் மீடியாவில் பிரபலமான நபராக இருக்கும் குஷி முகர்ஜி, பிரபல மாடலாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சூர்யகுமார் யாதவ் தொடர்பாக குஷி முகர்ஜி பேசுகையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு தொடர்ச்சியாக ஏராளமான மெசேஜ்களை அனுப்புவார். ஆனால் இப்போது நாங்கள் பெரிதாக பேசிக் கொள்வதில்லை. யாருடனும் இணைத்து என் பெயர் பேசப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளுடன் உறவில் இருந்து, பின் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சூர்யகுமார் – தேவிஷா ஷெட்டி திருமணம் 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இப்படியான சூழலில் சூர்யகுமார் யாதவ் தனக்கு மெசேஜ் செய்ததாக பாலிவுட் நடிகை பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
