தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சித்திரைத் தேரோட்டம் இன்று (27.04.2026) விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (27.04.2026) காலை நடைபெற்றது. முன்னதாக கடந்த 15-ம் தேதி தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, தேருக்கு வா்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி தொடங்கியது. 19 அடி உயரம் கொண்ட தோ், அலங்காரத்தின் மூலம் 50 அடி உயரத்தை எட்டியது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இந்தத் தோ் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயா்ந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளினர். பின்னா், திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தியாகேசா, ஆரூரா என்ற பக்தி முழக்கத்திற்கு மத்தியில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தேரை பக்தர்கள் பாதுகாப்பாக வடம் பிடித்து செல்ல தேவையான ஏற்பாடுகளை காவல்துறை, தீணையப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து செய்திருந்தன. வடக்கு வீதி சாலையில் இருபுறமும் கழிநீர் செல்லும் கால்வாய்கள் திறந்தநிலையில் உள்ள இடங்களில் இரும்பு கம்புகளை கொண்டு தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி செய்யப்பட்டிருந்தன.

தேரில் உள்ள சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்ய ஏதுவாக 14 இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version