இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகச் சரிந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், போர் பதற்றத்தால் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறையத் தொடங்கியது.
உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய், ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5% சரிந்து, ஒரு பேரலுக்கு $68 ஆகக் குறைந்தது. இது போர் தொடங்கிய ஜூன் 12 ஆம் தேதியிலிருந்த விலையைவிடக் குறைவாகும்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, திங்கட்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கப் பங்குச் சந்தையும் ஏற்றத்துடன் முடிவடைந்தது.