ஜூலை 1-ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நீண்ட தூர பயணத்திற்கு கம்மியான செலவில் விரைவாக பயணம் மேற்கொள்ளலாம் என்பதால், பலரும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ரயில் கட்டணத்தை சிறிதளவு உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு, 500கி.மீ வரையிலான தொலைவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இருக்காது. அதேநேரம் 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும்.ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது 500கி.மீ மேலான பயணத்தில் ஒரு கிமீக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும் உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை ரூ.10 அதிகரிக்கும்.
இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. சிறிதளவு மட்டுமே கட்டண உயர்வு என்பதால், பயணிகளை பெரிய அளவில் இது பாதிக்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.